இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று – கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அதிர்ச்சித் தகவல்!

Monday, December 28th, 2020

கடந்த 6 மாதங்களில் கொரோனா தொற்று காரணமாக, கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 78 பேர் தமது வீடுகளிலேயே மரணித்துள்ளதாக, கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்..

இக்காலப் பகுதியில் வீடுகளில் உயிரிழந்த 383 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளிலேயே அவர்களில் 78 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

வீடுகளில் மரணிப்போருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடைமுறை கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட போதும் வீட்டில் உயிரிழந்த முதல் கொரோனா தொற்றாளர் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியே அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அன்றுமுதல் இதுவரையிலான காலப்பகுதியில் 78 கொரோனா மரணங்கள் வீடுகளில் நிகழ்ந்துள்ளதாக பிரதான சட்ட வைத்திய அதிகாரி, விஷேட வைத்திய நிபுணர் அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்..

இதனிடையே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு, கடந்த முதலாம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை வீடுகளில் நிகழ்ந்த 130 மரணங்கள் பதிவானதாகவும் அதில் 37 மரணங்கள் கொரோனா தொற்றினால் நிகழ்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: