இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்க முன்னேற்றம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சரால் விளக்கம்!

Friday, January 28th, 2022

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற, புதிய ஆண்டின் முதலாவது இராஜதந்திர மாநாட்டின்போது, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதுகுறித்து விளக்கமளித்துள்ளாரென அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாத இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பான தகவல்களைப் பகிர்வதே குறித்த மாநாட்டின் நோக்கமாகும்.

பொறுப்புக்கூறல், நீதி மறுசீரமைப்பு மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகளினூடாக இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் அது திருத்தப்பட்டு வருகின்றது.

உத்தேசத் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், அதன் பின்னர் இறுதி அங்கீகாரத்திற்காக நாடாளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்புக் காவல் உத்தரவு, கட்டுப்பாட்டு உத்தரவு, நீதித்துறை மீளாய்வு உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், நீண்டகால தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாகத் தீர்த்தல், சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை இரத்துச் செய்தல், நீதவான்கள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளை அணுகுவதற்கான விதிகளை வெளிப்படுத்துதல் மற்றும் அறிமுகப்படுத்துதல், தடுப்புக் காவலில் உள்ள காலத்தில், துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளைத் தடுத்தல், குடும்பத்துடன் தொடர்புகொள்வதற்கான உரிமை, நீண்டகால கைதிகளுக்கு பிணை வழங்குதல் மற்றும் வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற பிரிவுகளிலான திருத்தங்கள் உள்ளடங்குவதாக வெளிவிவகார அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இதேநேரம் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 13 ஆவது பிரிவின் கீழ் ஆலோசனை சபையொன்றை ஸ்தாபிப்பதையும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், தடுப்புக் காவல் உத்தரவு அல்லது கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவருக்கும் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2021 ஜூன் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேருக்கு, ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதுடன், பயங்கரவாதச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின் கீழ் நீண்டகாலமாக நீதிமன்றக் காவலில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த 13 ஆம் திகதிய நிலவரப்படி மேலும் 13 பேர் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணி தொடர்பில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், நிலைமாறுகால நீதி, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் ஆகிய துறைகளில், சம்பந்தப்பட்ட தேசிய நிறுவனங்கள் ஆற்றிய பணிகளை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் பாராட்டியதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: