இலங்கையின் பொருளாதார மீளெழுச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஜப்பான் தூதுவர் உறுதியளிப்பு!

Saturday, July 2nd, 2022

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்கள் மற்றும் இலங்கையின் அபிவிருத்திகளுக்கான இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தி தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகொஷி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.

இலங்கையுடன் காணப்படும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தொடர்புகளை தொடர்ந்தும் பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இதன் போது தூதுவர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டார். ஜப்பான் இலங்கைக்காக வழங்கிவரும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் ஜனாதபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன் போது நன்றி தெரிவித்தார்.

இதே வேளை ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு எவ்வித உதவிகளையும் வழங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன். இந்நிலையிலேயே ஜனாதிபதிக்கும் ஜப்பான் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

மேற்கண்டவாறு வெளியாகிய செய்திகள் தொடர்பில் மறுப்பு தெரிவித்து இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுரகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ஜப்பான் இலங்கைக்கு உதவ மறுத்துள்ளது என்று வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும், இந்த செய்திக்கான தமது மறுப்பினை மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கான எதிர்கால சர்வதேச நாணய நிதியத்தின் நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர் சாந்தா தேவராஜன் மற்றும் கலாநிதி ஷர்மினி குரே ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஜனாதிபதி ட்விட்டரில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மின்சார சபைக்கு 50 பில்லியன் ரூபாய் நிலுவையை செலுத்தியது எரிசக்தி அமைச்சு - அமைச்சர் மஹிந்த அமரவீர த...
கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை - தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெ...
நாட்டில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா மரணங்கள் – வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரது எண்ணிக்கையும் 5...