இலங்கையின் பூகோள அமைப்பே பல்வேறு சவால்களிற்கு முகம்கொடுக்க நேரிட்டது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Friday, November 12th, 2021

இலங்கையின் பூகோள அமைப்பு காரணமாக இலங்கை பல்வேறு சவால்களிற்கு முகம்கொடுக்க நேரிட்டது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரி நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரியை ஸ்தாபிப்பது நீண்டகாலத் தேவைகளின் ஒன்றாக இருந்துவந்துள்ளது.

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட கல்விக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் நிலவுகின்ற வாய்ப்புகளைத் தேடுவதை தவிர, மாற்றுவழியொன்று இலங்கைக்கு இதுவரை இருந்ததில்லை.

ஒவ்வொரு வருடமும் நட்புறவு நாடுகளினால் வழங்கப்படுகின்ற பாடநெறிகள், ஒரு சில அதிகாரிகளுக்கு பாரிய பிரதிபலன்களைப் பெற்றுக் கொடுத்தாலும், மேலும் பலருக்கு அவ்வாறான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

அதனால், இந்தக் கல்லூரியை ஸ்தாபிப்பதன் மூலம், அதிக எண்ணிக்கையிலான சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வருடமும் அவ்வாறான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் உயர்தரத்தில் பாதுகாப்பு மற்றும் முறையான பாடநெறிகளைக் கற்கும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு, எதிர்காலத்தில் சிரேஷ்ட கட்டளைத் தளபதி பதவிவையைப் போன்று, படைத் தளபதி பதவிகளையும் வகிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்கக்கூடும்.

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் மூலம் அவ்வாறான அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்ற கல்வி இது போன்ற பதவிகளில் சிறந்து விளங்குவதற்கு அவசியமான முறையான உள நிலையை உருவாக்குவதற்கு மிகவும் அவசியமாகின்றது.

இந்தத் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, ஏனைய நாடுகளின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளைக் கவரும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் மூலம் வழங்கப்படுகின்ற உயர் தரத்திலான கல்வியின் மூலம் அவர்கள் பயனடைவதோடு, அவர்களின் சக வீரர்களுக்கு விரிவான சர்வதேசக் கருத்தியல் மற்றும் உத்வேகத்தையும் ஏற்படுத்தும்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் மூலம் வழங்கப்படுகின்ற சில பாடநெறிகள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

பட்டப்பின் படிப்பு சான்றிதழ்களை வழங்குவதற்காக, ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் அங்கிகாரம் பெற்ற தேசிய பாதுகாப்புக் கல்லூரி, NDCயில் உள்ள பாடநெறிகளைக் கற்பதற்கு அவர்கள் சந்தர்ப்பங்களைப் பெற்றுக்கொள்வார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

இந்திய சமுத்திரத்தில் கிழக்கையும் மேற்கையும் இணைக்கக்கூடிய இலங்கையின் பூகோள அமைப்பை கவனித்துக்கொள்ளும்போது, மூலோபாயங்கள் பற்றி சரியான புரிதல்கள் பெற்றிருப்பது மிகவும் அவசியமாகும்.

இந்த அமைப்பின் காரணமாக, இலங்கை பல்வேறு வாய்ப்புக்களைப் போன்று பல சவால்களுக்கும் முகங் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

இராணுவத்தைப் போன்று அரச பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த மூலோபாயங்களை கவனத்திற்கொள்வதைப்போன்று, அரசாங்கத்தின் கொள்கை மற்றும் அவை தொடர்பாக நிலவுகின்ற உத்திகள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

இந்த தேசிய பாதுகாப்பு கல்லூரியில் நுழைகின்றவர்களுக்கு, இத்துறைகளில் ஆழமான அடிப்படை அறிவு மட்டுமன்றி, தந்திரோபாய ரீதியாக சிந்திப்பதற்கும் ஒரு விடயம் தொடர்பில் முழுமையாக அவதானத்தைச் செலுத்தக்கூடிய இயலுமை மற்றும் பொருத்தமான நவீனமயப்படுத்தக்கூடிய திறமை ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும் என்று நான் நம்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: