இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்திற்கு இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தி!

Friday, April 29th, 2022

இலங்கை நாடாளுமன்றம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே இல் உள்ள தற்போதைய கட்டடத்துக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (29) 40 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது.

காலி முகத்திடலில் அமைந்திருந்த நாடாளுமன்றக் கட்டடத்தில் போதிய இடவசதி இன்மையால் அதனை வேறொரு இடத்துக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதன் பின்னர் கோட்டே பிரதேசத்தில் நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடத்தை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்கமைய 1979 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பிரதேசத்தில் காணப்பட்ட 16 ஏக்கர் சிறிய தீவில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கான பணிகள் ஆரம்பமாகின.

அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் வழிகாட்டிலின் கீழ் இக்கட்டடத்தைக் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது

இதற்கமைய ஜெஃப்ரி பாவா பிரதான கட்டடக் கலைஞராகத் தெரிவு செய்யப்பட்டதுடன், புதிய கட்டடத்தை அமைப்பதற்கான பணிகளை ஜப்பானிய நிறுவனமொன்று பொறுப்பேற்றிருந்தது. இலங்கையின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட நாடாளுமன்ற கட்டடத்தின் அனைத்து கட்டடக்கலை நடவடிக்கைகளிலும் தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் 1982ஆம் ஆண்டு முடிவடைந்ததுடன், 1982 ஏப்ரல் 29ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பகுதியில் அமைக்கப்பட்ட புதிய நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இதற்கமைய அதுவரை காலி முகத்திடலிலிருந்த பாராளுமன்றம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே புதிய கட்டடத்துக்கு கொண்டுவரப்பட்டது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டதுடன் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே நகரம் இலங்கையின் நிர்வாகத் தலை நகரமாக மாறியது.

நாகை மரங்களை வரிசையாகக் கொண்ட பிரதான சாலையின் ஊடாகத் தற்போதைய நாடாளுமன்ற வளாகத்துக்கான நுழைவு அமைந்துள்ளது. நாடாளுமன்றம் பொது மக்களுடன் நெருக்கமாக இருப்பதற்கு ஏதுவாக புரதான கட்டடக் கலை வடிவமான ‘அம்பலம’ என்ற கருத்துருவாக்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட நிர்மானங்களை இங்கு காணலாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களை சந்திப்பதற்கான இடமாக இது அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் நீர் நிரம்பிய குளங்களையும் காண முடியும்.

நாடாளுமன்றத்தின் பிரதான கதவுகளுக்கு அருகில் கலாநிதி மஞ்சு ஸ்ரீ சித்திரக் கலைஞரினால் வரையப்பட்ட சுவரோவியங்களைப் பார்க்க முடியும். சபா மண்டபத்தின் பிரதான கதவு செப்பு மற்றும் வெள்ளி மென்பூச்சைக் கொண்டிருப்பதுடன், இதில் புராதன கல்வெட்டுப் பாணியில் இலங்கை அரசியலமைப்பின் பாயிரம் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது.

செவ்வக வடிவான சபாமண்டபம், முழுக்கட்டடத்தினதும் மையப்பகுதியில் இரண்டு மாடிகளின் உயரத்தை உள்ளடக்குகின்றது. மன்னர்கள், விகாரைகள் மற்றும் கோறளைகளினது 18 கொடிகள் காட்சியளிக்கின்றன. மேலும் சபா மண்டபத்தின் மத்தியில் தொங்கவிடப்பட்டுள்ள வெள்ளி மென்பூச்சைக் கொண்ட பாரிய மின்விளங்கு சபா மண்டபத்துக்கு அபிமானத்தைச் சேர்க்கிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: