இலங்கையின் தடுப்பூசி கொள்வனவு நடைமுறைகள் வெளிப்படைத் தனைமையானவை – உலக வங்கி பாராட்டு !

Saturday, June 26th, 2021

கொரோனா ஒழிப்பு தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் கொள்முதல் நடைமுறைகளில், இலங்கை பின்பற்றும் முறைமை குறித்து, உலக வங்கி பாராட்டுத் தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும்போது பின்பற்றப்படும் வெளிப்படைத்தன்மை மற்றும் முறைமை காரணமாக, தெற்காசிய நாடுகளில் உள்ள ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தை முன்னிலையில் உள்ள நிறுவனமாக உலக வங்கி அடையாளப்படுத்தியுள்ளதென, கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இதற்காக வழங்கப்படும் அங்கீகாரமாக, தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும்போது, உலக வங்கியின் இணையத்தளத்தின் ஊடாகக் கொடுப்பனவுகளைச் செய்வதற்கான வாய்ப்பு, இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக, பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்துள்ளார்.

கொவிட் ஒழிப்பு விசேட குழு, ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடிய போதே, இதுபற்றித் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த மாதம் ஆரம்பம்முதல் செப்டெம்பர் மாதம் வரையில், சைனோஃபாம், சைனோவெக், ஸ்பூட்னிக் உள்ளிட்ட 17 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. அந்தத் தடுப்பூசிகளை, நாடளாவிய ரீதியில் அதிகளவானோருக்குக் குறுகிய காலப்பகுதியில் வழங்க, துரித நிகழ்ச்சித்திட்டம் ஒன்றைத் தயாரிக்கவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

அத்துடன் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கையை, தெரிவு செய்யப்பட்ட வைத்திசாலைகளின் ஊடாக மேற்கொள்வதற்கான முன்மொழிவொன்றை, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு வழங்க உள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார்.

இதன் மூலம், நாளொன்றின் பெரும்பகுதி நேரத்தை தடுப்பூசி பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும், அதற்கு மருத்துவர்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், வைத்தியர் பாதெனிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: