இலங்கையின் சுற்றுலா மறுமலர்ச்சி பயணத்தில் இந்தியா முன்னணிப் பங்காளியாக உள்ளது – கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!

Sunday, November 6th, 2022

சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஆதாரமாக இந்தியா விளங்குவதுடன் இலங்கையின் சுற்றுலா மறுமலர்ச்சி பயணத்தில் முன்னணி பங்காளியாகவும் உள்ளது என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 21 வீதமானவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். கடந்த மாதம் மொத்தம் 8,862 பேர் இலங்கை வந்துள்ளனர்.

இக்கட்டான காலங்களில் இந்தியா எப்போதும் இலங்கையுடன் வலுவாக நின்றுள்ளது என உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒக்டோபர் மாதத்தில் 42,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 568,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அந்நியச் செலாவணியை உருவாக்கும் முக்கிய வழிகளில் ஒன்றாக சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள இலங்கை, 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என நம்புவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வருகை தந்தால், சுற்றுலாத் துறை மூலம் அரசாங்கம் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: