இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, March 28th, 2023

சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க் ஆகிய நிறுவனங்கள், ஷெல் குழுமத்துடன் இணைந்து இலங்கையில் எரிபொருள் சில்லறை சந்தையில் நுழைவதற்கான அனுமதியை வழங்குவதற்கு இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

எரிசக்தி குழு மற்றும் தொடர்புடைய பிற கொள்முதல் குழுக்கள் என்பன குறித்த 3 நிறுவனங்களையும் இலங்கையில் இயங்குவதற்கான அனுமதியை வழங்க தங்கள் ஒப்புதல் மற்றும் பரிந்துரையை வழங்கியுள்ளன.

இதன்படி, 3 நிறுவனங்களுக்கும் கனியவள கூட்டுத்தாபனத்தால் இயக்கப்படும் தலா 150 எரிபொருள் நிலையங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் மற்றும் விற்பனை செய்வதற்கும் 20 வருடங்கள் செயற்படுவதற்கான உரிமம் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட குறித்த ஒவ்வொரு நிறுவனங்களாலும் புதிய இடங்களில் மேலும் தலா 50 எரிபொருள் நிலையங்கள் நிறுவப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: