இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி!

Friday, January 18th, 2019

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸின் மனிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தின் தலைவர் தகெய்கோ நாகாவோ வரவேற்றுள்ளார்.

இலங்கையில் மூன்று முக்கிய திட்டங்களை மேற்கொள்வதற்காக 455 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த தொகையில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கான தூண்களைக்கொண்ட நெடுஞ்சாலை நிர்மாண திட்டத்திற்காக வழங்கப்படவுள்ளது ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய உப பிராந்தியத்திற்கான பொருளாதார உதவி வழங்கும் கொள்கை சட்டகத்தின் படி இந்த இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞான, தொழிநுட்ப, மனித வள அபிவிருத்தி திட்டத்திற்காகவும் இலங்கைக்கு 145 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி திட்டங்களுக்கான சாத்திய வள ஆய்வுகளுக்கான தொழிநுட்ப உதவி வழங்கும் முன்மொழிவு முறைமைக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணக்கப்பாடுகளுக்கான உடன்படிக்கைகளில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தகஹிகோ நாகஓ அவர்களும் கைச்சாத்திட்டனர்.

Related posts: