இலங்கைக்கு அனைத்து சாதகமான வழிகளிலும் இந்திய அரசாங்கம் செயற்படும் – உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு !

Wednesday, September 21st, 2022

இலங்கைக்கு அனைத்து சாதகமான வழிகளிலும் இந்திய அரசாங்கம் செயற்படும் என இந்தியா அறிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையின் அனைத்து முக்கியமான பொருளாதார துறைககளிலும் நீண்ட கால முதலீடுகளை இந்தியா மேற்கொள்வதோடு அதற்கான சந்தர்ப்பங்களையும் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இந்தியா எதிர்வரும் காலங்களில் எவ்வித உதவியினை வழங்காது என தெரிவித்தமைக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா கடந்த சில மாதங்களில் 04 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியினை பெற்றுக்கொடுத்துள்ளது என்பதனை நினைவுகூற விரும்புவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியா, இலங்கையுடன் தனது கடனை மறுசீரமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகள் கடந்த 16 ஆம் திகதியன்று ஆரம்பித்ததாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில்; இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன் சுமார் 2.9 பில்லியன் கடனுக்காக ஒரு ஆரம்ப ஒப்பந்தத்தை எட்டியது.

அத்துடன் உத்தியோகபூர்வ கடனாளர்களிடமிருந்து நிதி உறுதிமொழிகள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பித்தது.

இதேவேளை இலங்கைக்கு நீண்ட கால அடிப்படையில் உதவத் தயார் என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: