இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை- ம.உ.ஆணைக்குழு விசாரணை முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஏழாலை வடக்கில் வசிக்கும் பாலசிங்கம் நிரஞ்சன் (29) மற்றும் பாலசிங்கம் பிரகாஸ் (26) ஆகிய இளைஞர்கள் கடந்த 19 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் தமது வீடு நோக்கி சென்றுள்ளனர்.
வீட்டுக்கு அருகில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிஸார் குறித்த இளைஞர்களை மறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர். வாகனத்தின் ஆவணங்களை சோதித்துவிட்டு அடையாள அட்டையை கோரியுள்ளனர்.
அதற்கு இளைஞர்கள் அடையாள அட்டை இல்லை சாரதி அனுமதிப்பத்திரம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனை ஏற்க மறுத்த பொலிஸார் குறித்த இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு நிரஞ்சன் என்ற இளைஞனை தலை கீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கியுள்ளனர். மற்றைய இளைஞரையும் மோசமாக தாக்கியுள்ளனர். அடுத்த நாள் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளார்கள். களவு சம்பந்தமான சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதாக உறவினர்களுக்குப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இளைஞர்களிடம் இருந்த 3 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துள்ளார்கள் என சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞர்கள் இருவரையும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்ததுடன் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்கள்.
Related posts:
|
|