பயிரிடப்படாத பெருந்தோட்ட காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஆலோசனை – தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா!

Monday, March 8th, 2021

பெருந்தோட்ட பகுதிகளில் பெருந்தோட்ட பயிர்கள் பயிரிடப்படாத காணிகளை தோட்ட மக்களுக்கும் தோட்டங்களை அண்மித்து வாழ்பவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்படுவதாக  தெரிவித்துள்ள தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா பெருந்தோட்டங்கள் நிறுவனங்களுக்கு பலவீனமான ஒப்பந்தங்கள் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவை முற்றிலும் நிறுவனம் சார்ந்தே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கண்காணிப்புக்கு நியமிக்கப்பட்ட குழுக்களும் தமது செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுத்திருக்கவில்லை எனவும் தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாட்டில் பெருந்தோட்ட பயிர்கள் பயிரிடப்படாத 39 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு காணப்படுகின்றது. இது குறித்து நீண்ட நாட்களாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த நிலங்களை தோட்ட மக்களுக்கும் தோட்டங்களை அண்மித்து வாழும் மக்களுக்கும் பயிர் செய்கை மேற்கொள்ளும் நோக்கில் பகிர்ந்தளிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக நாட்டின் பொருளாரத்தை மேலும் பலப்படுத்த முடியும். நிலங்களை சீரமைக்க தோட்ட நிறுவனங்களுக்கு காலஅவகாசம் வழங்கி அவை நிறைவேற்றப்படாவிட்டால் அது பயனற்றதாகிவிடும் எனவும் தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: