இருதரப்பு அரசியல் ஆலோசனைகளில் வலுவான கூட்டணியை இலங்கை மற்றும் ரஷ்யா மீள உறுதிப்படுத்தல்!

Tuesday, October 12th, 2021

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் 10 ஆவது சுற்று 2021 அக்டோபர் 08ஆந் திகதி, வெள்ளிக்கிழமை மொஸ்கோவிலுள்ள ரஷ்யாவின் வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்றது.

இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் ரஷ்யாவின் வெளிவிவகார பிரதி அமைச்சரான தூதுவர் இகோர் மொர்குலோவ் ஆகியோர் இந்த ஆலோசனைகளுக்கு இணைத் தலைமை தாங்கினர்.

இந்த சந்திப்பின் போது, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகள் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை உள்ளடக்கிய இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான பன்முகத்தன்மை வாய்ந்த உறவுகளை இரு தரப்பினரும் மீளாய்வு செய்தனர். பாதுகாப்பு, கல்வி, இணைப்பு மற்றும் சுற்றுலாத் துறையிலான ஒத்துழைப்பு மற்றும் கோவிட்-19 க்கு எதிரான போராட்டம் ஆகியன குறித்தும் இதன்போது இரு தரப்புபினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகள் மற்றும் வலுவான கூட்டணியை நினைவுபடுத்தி, பன்முகத்தன்மை சார்ந்த பரஸ்பர ஆர்வம் குறித்த விடயங்களில் ஒத்துழைப்பதற்கு இரு தரப்பினரும் மீளுறுதிப்படுத்தினர். பிராந்திய மற்றும் பரஸ்பரம் ஆர்வமுள்ள சர்வதேச விடயங்கள் தொடர்பில் இந்த ஆலோசனைகளின் போது கவனம் செலுத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டில் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான இராஜதந்திர உறவுகள் தாபிக்கப்பட்ட 65வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்கான ஆவலை இரு தரப்பினரும் வெளிப்படுத்தினர்.

ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனித அபேவிக்ரம லியனகே, இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி பி. மெட்டரி, இலங்கை மற்றும் ரஷ்யா வெளிநாட்டு அமைச்சுக்களினதும் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தினதும் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: