இராணுவத்தை களமிறக்காமல் இருந்திருந்தால் நாடு தீப்பற்றியிருக்கும் – நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Wednesday, May 10th, 2023

மே 09 தின சம்பவத்தை தொடர்ந்து இராணுவத்தை களமிறக்காமல் இருந்திருந்தால் மே 10 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் உட்பட நூறு அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும்.

இராணுவத்தின் பிரவேசத்தின் பின்னரே பாரிய அழிவு அப்போது தடுக்கப்பட்டது என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள்  மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வு இடம்பெற்ற போது 2022.05.09 சம்பவம் இடம்பெற்று ஒரு வருட காலம் நிறைவடைந்ததை சுட்டிக்காட்டி ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாடினார்கள்.

பொதுஜன பெரமுனவின் முறையற்ற செயற்பாட்டினால் மே 09 சம்பவம் தோற்றம் பெற்று பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது என எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டினார்கள்.

எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மே 09 பயங்கரவாத சம்பவம் இடம்பெற்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என ஆளும் தரப்பினர் அதிருப்தி தெரிவித்தார்கள்.

இவ்வாறான நிலையில் விசேஷ கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் நீதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மே 09 காலி முகத்திடல் சம்பவத்தை தொடர்ந்து  அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களை அழிக்க ஒரு தரப்பினர் தீர்மானித்து, அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை தயாரித்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றது.

இதனை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவிக்க பலமுறை முயற்சித்தேன். இருப்பினும் அது பயனளிக்கவில்லை. மே 09 சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மே 10 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் உட்பட ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உள்ளடங்களாக 100 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் மற்றும் வீடுகளை தீக்கிரையாக்க ஒருதரப்பினர்  தீர்மானித்திருந்தனர். இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன்.

நாட்டின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க துப்பாக்கி பிரயோகத்தை பிரயோகிக்கும் அதிகாரம் அப்போது இராணுவத்துக்கு வழங்கப்பட்டது.

கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையாக செயற்பட அனுமதி வழங்கப்பட்டது. ரத்கம, அங்கொட மற்றும் புறகோட்டை ஆகிய பகுதிகளில் மூன்று துப்பாக்கி சூட்டு பிரயோகத்தை இராணுவத்தினர் மேற்கொண்டார்கள்.

இராணுவத்தை களமிறக்கி, அவர்களுக்கு துப்பாக்கி பிரயோகத்துக்கு அனுமதி வழங்காமல் இருந்திருந்தால் மே 10 நாடு முழுவதும் தீ பற்றியிருக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகளின் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

கட்டுப்படுத்த முடியாது தவிக்கும் அமெரிக்கா: கொரோனாவால் ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பேர் ப...
உணவு பாதுகாப்பு மேம்பட்டிருந்தாலும் கூலித்தொழிலாளர்களிடையே வீழ்ச்சியடைந்துள்ளது – ஐ.நாவின் பயிர் மற்...
கிரிக்கட் மீதான தடை - சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை...