இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய விண்ணப்பித்த பல நிறுவனங்களுக்கு அனுமதி – தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் தகவல்!

Monday, December 27th, 2021

யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு விண்ணப்பித்த பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே தெரிவித்துள்ளார்.

எனினும் இரசாயன உர தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து இடையூறுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிரிதலை உழவர் இயக்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், கடந்த போகத்தில் எஞ்சியிருந்த இரசாயன உரங்கள் மற்றும் சேதன உரங்களைப் பயன்படுத்தி, இரண்டு வகைகளின் கீழ் பயிர்ச் செய்கையை ஆரம்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இரசாயன உரப் பயன்பாட்டில் விளையும் பயிர்களின் விளைச்சலைக் காட்டிலும் இயற்கை உரச் செய்கை தோல்வியடைந்துள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, தம்புள்ளை – வெவலவெவ பிரதேச விவசாயிகள் வெளிநாட்டு சந்தைகளை இலக்கு வைத்து நீண்ட காலமாக கொய்யா, மாம்பழம், சீதாப்பழம், பப்பாளி, மாதுளை மற்றும் ஏனைய பழவகைகளை பயிரிட்டு வருகின்ற போதிலும், பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் இன்மையால் அவற்றை பயிரிடுவதில் பாரிய அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், விற்பனைக்கு தேவையான மரக்கறிகள் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் அதிகமாக காணப்படுவதாக தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: