இயற்கை எரிவாயு தொடர்பான தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில !

Friday, September 4th, 2020

இலங்கையில் இயற்கை எரிவாயு தொடர்பான தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் இருப்பதாக 50 ஆண்டுகளாக கூறப்படுகிறன.  ஆனால் இதுவரை எங்களால் அந்த வளத்தை மீட்டெடுக்க முடியவில்லை. அந்த வளத்தை உருவாக்குவதற்கான தடைகள் என்ன என்பது தொடர்பில் ஆராய வேண்டும். ஒருபுறம், நாம் முதலீட்டாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். உலகத் தரத்திற்கமைய, இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு திறன் மிக உயர்வாக உள்ளதுடன், வணிக ரீதியாக சாத்தியமானதாகும்.

பொதுவாக, உலகத் தரத்திற்கமைய, ஏழு கிணறுகள் தோண்டப்பட்டால், ஒன்று மட்டுமே வெற்றி பெறும். ஆனால் இலங்கையில் தோண்டப்பட்ட நான்கு கிணறுகளில் இரண்டில் இயற்கை எரிவாயு உள்ளது. ஆனால் அதையும் மீறி உலகளாவிய முதலீட்டை ஈர்க்க முடியவில்லை. நமது நாட்டில் இயற்கை எரிவாயு கொள்கை இல்லை. அதற்கு தேவையான சட்டங்கள் தயாரிக்கப்படவில்லை.

எனவே, முதற் கட்டமாக, இலங்கையில் இயற்கை எரிவாயு குறித்த தேசிய கொள்கையை வகுத்து அமைச்சரவையில் முன்வைத்தேன். அதற்கமைய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், எண்ணெய் கப்பல் ஓரிரு நாட்கள் தாமதமாக இலங்கைக்கு வந்தாலும், இலங்கையில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகின்றது.கடந்த அரசாங்கத்தின் போது நாங்கள் அதை இரண்டு முறை அனுபவித்தோம்.

இதனால் கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு வளாகத்தில் 942 மில்லியன் ரூபாய் செலவில் 29,000 கன மீட்டர் திறன் கொண்ட மூன்று எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை நிர்மாணிக்க அமைச்சரவை ஒப்புதல் நேற்றையதினம் வழங்கப்பட்டது.

இதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பை மேலும் மேம்படுத்தவும், மலிவு விலையில் கொள்முதல் மற்றும் சேமிப்பை செயல்படுத்தவும் முடியும். இதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தடையில்லா விநியோகத்தை உறுதி செய்வோம் என்று நம்புகிறோம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: