இம்மாத இறுதிக்குள் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைபை அரச தலைவரிடம் வழங்க நடவடிக்கை!

Sunday, January 23rd, 2022

இம்மாத இறுதிக்குள் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைபினை, அதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் வழங்குவதற்கு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

1978 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பானது இதுவரை 20 தடவை திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்கான வரைபை உருவாக்க நிபுணர்கள் குழுவொன்றை நியமித்திருந்தார்.

அரச தலைவர் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான இந்தக் குழுவில் அரச தலைவர் சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, மனோகரா டி சில்வா, சஞ்ஜீவ ஜயவர்தன, சமன் ரத்வத்த ஆகியோரும், பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், பேராசிரியர் நசீமா கமுர்தீன், கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியர் வசந்த செனவிரத்ன ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தக் குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதுடன், குறித்த நிபுணர்கள் குழு பல்வேறு தரப்புக்களிடமிருந்து யோசனைகளைப் பெற்று புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைபினை இறுதி செய்துள்ளதாக அறியமுடிகிறது.

கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் சுமார் ஒருவருடத்திற்கும் மேலாக நடைபெற்ற செயற்பாடுகளின் அடிப்படையில் தற்போது இக்குழுவானது தனது வரைபினை இறுதி செய்துள்ளது.

இந்த வரைபில் அரசியல் கட்சிகளினால் முன்னொழியப்பட்ட விடயங்கள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் ஆகியன உள்ளடக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: