இன்றுமுதல் நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணி நேர மின்வெட்டு – மின்வெட்டு நாசகார செயல் அல்லவென எதிர்பார்ப்பதாகவும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Saturday, December 4th, 2021

மாலை 06 மணி தொடக்கம் இரவு 09.30 வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில் இன்று 04 ஆம் திகதிமுதல் குறித்த காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் முழுமையாக வழமைக்கு திரும்பும்வரை சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் நேற்று மின்சார விநியோகம் தடைப்பட்ட போது, நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள இரண்டு மின்பிறப்பாக்கிகள் செயலிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கிகளை செயற்படுத்த குறைந்தபட்சம் நான்கு நாட்கள் தேவைப்படும் எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாகவும் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால் சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மின்சார விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் மின்வெட்டு நாசகார செயல் அல்லவென எதிர்பார்ப்பதாக அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும், மின்வெட்டுக்கான உரிய காரணத்தை அறிவதற்காக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: