ஆளணி வளங்களின் பற்றாக்குறையுடன் இயங்கும் இ.போ.ச. கிளிநொச்சிச்சாலை!

Tuesday, November 21st, 2017

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சிச்சாலைக்கான போதிய பௌதீக மற்றும் ஆளணி வளங்களின் பற்றாக்குறை காணப்படுவதனால் மக்களுக்கு உரிய சேவையை வழங்குவதில் சிரமங்கள் காணப்படுவதாக சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சிச்சாலை கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மீள இயங்க ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் கடந்த போதும், அதற்கான போதிய வளங்கள் இன்றிக் காணப்படுகின்றன.

இவ்வாறு வளப்பற்றாக்குறையினால் இயங்குவதனால் போதிய சேவையை மக்களுக்கு வழங்க முடியாதுள்ளதாக சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதாவது, தற்போதுள்ள 30 பேருந்துகளில் 25 வரையான பேருந்துகளே சேவைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதில் எண்பது வீதமான பேருந்துகள் மிகவும் பழையனவாகவே காணப்படுகின்றன.

இதைவிட சாரதிகள், நடத்துனர்கள், திருத்துநர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. அத்துடன், போதிய கட்டட வசதிகள் இன்றி ஏற்கனவே தமிழீழ போக்குவரத்துக் கழகத்தினால் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட தரிப்பிடம் மற்றும் நேரக்காப்பாளருக்கான கட்டடம் என்பவற்றில் அலுவலகம் இயங்கி வருகின்றது.

இதனால் போதிய சேவையை வழங்கமுடியாதிருப்பதாகவும் வளங்கள் கிடைக்கும் பட்சத்தில் உரிய சேவைகளை வழங்க முடியும் என மேற்படி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts: