இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!
Monday, October 4th, 2021
இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் இன்று(04) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தொலைக்காணொளி ஊடாக இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதற்கிணங்க பிரதான நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரும் பிரதான நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்பிரகாரம் காலி மாவட்டத்தில் 50 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 479 வீடுகளும், கண்டி மாவட்டத்தில் 184 வீடுகளும், ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை ஆகிய பகுதிகளில் 155 வீடுகளும், நுவரெலியா, அக்கரபத்தனை ஆகிய பகுதியில் 267 வீடுகளும் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டதுடன் வீடுகளுக்குரிய ஆவணங்கள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதேவேளை, இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் புஸல்லாவை சரஸ்வதி கல்லூரியில் அமைக்கப்பட்ட புதிய கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.
அதேவேளை நுவரெலியா – இராகலை லிடேஸ்டேல் தோட்டப் பிரிவான டியநிலை மேல் பிரிவு தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 166 வீடுகளும் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


