இந்தியா மற்றும் மாலைதீவுகளுடன் கடல்சார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு செயலகம் கொழும்பில் ஸ்தாபிப்பு!

Tuesday, March 2nd, 2021

இந்தியா மற்றும் மாலத்தீவுகளுடன் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான முந்தைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான முத்தரப்பு கூட்டங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்களுக்கு இணங்க, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முத்தரப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான செயலகம் நேற்று மார்ச் முதலாம் திகதி கொழும்பில் உள்ள, இலங்கை கடற்படை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்கே கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இந்தியா மற்றும் மாலைதீவு நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியின் காரணமாக அனைத்து நாடுகளும் பயனடையவுள்ளதாக இந்த நிகழ்வின் போது வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முத்தரப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான செயலகம் 24/7 நேரமும் செயற்படவுள்ளதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்துள்ளார்.

முன்பதாக இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் இலங்கையின் தலைமையில் கொழும்பில் கடந்த ஆண்டு நவம்பர் 27 மற்றும் 28ம் திகதிகளில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தொடரில் பங்களாதேஷ், சீஷல் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகள் இணைய தொழிநுட்பம் மூலமாக பார்வையாளர்களாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: