இந்தியா, சீனா வழங்கும் ஒத்துழைப்புகளை ஒருபோதும் மறக்க முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவிப்பு!

Thursday, March 9th, 2023

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வழங்கியுள்ள ஒத்துழைப்பை ஒருபோதும் மறக்க முடியாது.

ஆகவே இவ்விரு நாடுகளுக்கும் இலங்கை மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற கலால் சட்டம் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்து,உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நிதி விடுவிப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை தொடர்ந்து தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு சிறந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது, கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் வெற்றிப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறோம்.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கி அரசியல் செய்யும் நோக்கம் எமக்கு இல்லை.

இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநரான சீனா கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இலங்கைக்கு சார்பாக செயற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது,ஆகவே சீன கூட்டரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவும் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து இலங்கைக்கு சாதகமாக செயற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது எரிபொருள் ,மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய இந்தியா 5 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

பொருளாதார மீட்சிக்காக இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகள் வழங்கியுள்ள ஒத்துழைப்பை ஒருபோதும் மறக்க முடியாது,ஆகவே இவ்விரு நாடுகளுக்கும் நாட்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: