இந்தியாவில் இருந்து அமுல் பால் மாவை இறக்குமதி செய்ய நடவடிக்கை – இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அந்நாட்டு பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடல்!

Tuesday, July 26th, 2022

இந்தியாவில் இருந்து அமுல் பால்மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அந்நாட்டு பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடியுள்ளது.

இந்திய கடன் வசதியின் கீழ் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பும் ஒரு தலைமை அதிகாரியை பெயரிடவும், பேச்சுவார்த்தையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அடுத்த நடவடிக்கைக்கான திட்டத்தை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளன.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட குழுவினர் குஜராத் மாநிலத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன் அமுல் நிறுவனத்துடன் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தியாவின் பால் உற்பத்தியில் நாற்பத்தைந்து சதவீதத்தை வழங்கும் அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். சோதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை சந்தித்ததாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கூறுகிறது.

இலங்கைக்கு அமுல் பால் இறக்குமதி செய்வது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மேலும் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொட, இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் கைத்தொழில் அமைச்சர் ஸ்ரீ பசுபதி குமார் பராஸை சந்தித்து, இலங்கைக்கு பால் மாவை இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் கால்நடைத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறுவது தொடர்பாகவும் பிரதி உயர்ஸ்தானிகர் நிலுகா கதுருகமுவ உள்ளிட்ட குழுவினர் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: