இந்தியாவின் கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு எரிபொருள் – மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவிப்பு!

Monday, March 7th, 2022

இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு கச்சா எண்ணெயை பெற்றுக் கொள்வதற்கான உத்தரவை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் முழு கொள்ளளவில் இயங்கி வருவதாகவும் அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுத்திகரிப்பு நோக்கங்களுக்காக நிலையங்களில் 2 இலட்சத்து 8 ஆயிரம் மெட்ரிக் டொன் கச்சா எண்ணெய் இருப்பை வைத்திருக்க முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இதனை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கவனித்து வருவதாகவும், நுகர்வோர் மற்றும் மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குவதில் சிக்கல் இருக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமைக்குள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் வழமை போன்று எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியுமென, வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: