இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் – தமிழ்நாட்டின் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை!

Tuesday, June 25th, 2019

தமிழ்நாட்டின் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர், 1990ஆம் ஆண்டு, இராமேஸ்வரத்துக்கு சென்றனர். அவர்கள் அனைவரும் இராமேஸ்வரத்திலுள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தை, ஆனைக்குட்டம், செவலூர், அனுப்பங்குளம், வெம்பக்கோட்டை, மல்லாங்கிணறு மற்றும் மேட்டமலை உள்ளிட்ட அகதிகள் முகாம்களில், சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

அவர்கள் ‘தாங்கள் மீண்டும் இலங்கை செல்ல விரும்பவில்லை எனவும், இந்தியக் குடியுரிமை வழங்கி இந்தியர்களைப்போல அனைத்து உரிமைகளையும் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் இருந்து 1990ஆம் ஆண்டு இராமேஸ்வரத்துக்கு சென்று 35 வருடங்கள் ஆகின்ற போதும் அவர்களுக்கு இதுவரை வாக்குரிமை வழங்கப்படவில்லை.

வாழும் இடத்துக்கான சொந்த முகவரி இல்லாமலும், தமக்கென்று சொத்துக்கள் வாங்க முடியாத ஒரு அவலநிலையில் வாழ்ந்து வருவதாகவும் குறித்த அகதிகள் முகாமில் வாழ்ந்துவரும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்..

மேலும் இலங்கையிலிருந்து இராமேஸ்வரத்துக்கு சென்று தாம் கூலிவேலை செய்தே வாழ்க்கை நடத்தி வருவதாகவும், தற்போது தாம் இலங்கை திரும்பினால் புதிதாக வாழ்க்கையை ஆரம்பிக்க நேரும் என்றும் கவலையுடன் கூறுகின்றனர்.

ஆகவே தாங்கள் இலங்கை திரும்ப விரும்பவில்லை எனவும், எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் எனவும் இலங்கை அகதிகள் மாவட்ட ஆட்சியாளரிடம் கோரியுள்ளனர்.

Related posts: