இணைந்து பணியாற்ற இலங்கை தயாராக உள்ளது – ஜப்பானின் புதிய பிரதமருக்கான வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச !

Wednesday, September 16th, 2020

ஜப்பானின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் யோஷிஹைட் சுகாவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாக்கு வாழ்த்து தெரிவித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஏற்கனவே இருக்கும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த தங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றேன் என்றும் மஹிந்த ராஜபக்ஷ அதில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் ஜப்பான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் யோஷிஹைட் சுகா ஒரு முக்கியமான தருணத்தில் பதவியேற்கிறார். அவரது நியமனம் இன்று நடைபெற உள்ளது.

அகிதா மாகாணத்தில் கிராமப்புறத்தில் உள்ள ஸ்ட்டோபெரி விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த சுகா, சாதாரண மக்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களின் நலன்களுக்கு சேவை செய்வதாக உறுதியளித்துள்ளார்.

ஜப்பானின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமர் அபே, கடந்த மாதம் சுகாதார காரணங்களை சுட்டிக்காட்டி பதவியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: