இணக்க அரசியல் யாருக்காக…..? மௌனித்துக் கிடந்த குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன!

Tuesday, June 21st, 2016

புதிய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திக் கொண்டிருக்கும் இணக்க அரசியல் தொடர்பாக பலத்த விமர்சனங்கள் இப்போது தலைதூக்கத் தொடங்கியிருக்கின்றது. மௌனித்துக் கிடந்த குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கை திறப்புவிழா செய்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் நிலங்களை விடுவிப்பது மற்றும் இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் இருப்பவர்களை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுவது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் அர்த்தமுள்ள அறிவிப்புக்களைச் செய்வார் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஜனாதிபதி தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்றவகையில் எதையும் கூறவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் நடத்தும் இணக்க அரசியல் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துக் கொண்டிருக்கின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில் மேலும் –

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மத்திய அரசுகளுடன் மிகவும் நெருக்கமாக உறவு கொண்டாடி தமக்கு பதவிகளையும், பிள்ளைகளின் புலமைப் பரிசில்களையும், உறவினர்களின் வேலைவாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்கின்றார்கள்.

நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியல் நடத்தியது யுத்தம், மரணம், இரத்தம் என மிக நெருக்கடியான காலகட்டமாகும்.

அது கட்டாந்தரையில் பயிர் விளைவிப்பதைப்போன்ற காலம். அத்தகைய காலத்தில், உரிமைக்கான போராட்டத்தில் அனைத்து இயக்கப் போராளிகளினதும், எமது மக்களினதும் தியாகத்தினால் கிடைக்கப்பெற்றிருந்த அரசியல் தீர்வை பாதுகாப்பதற்கும், அதிலிருந்து முன்னோக்கிச் செல்வதற்கும் எமது மக்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களை பட்டினிச் சாவிலிருந்து உணவளித்து பாதுகாப்பதற்கும், முடக்கப்பட்டிருந்த பாதைகளைக் கடந்தும் மக்கள் பயணங்களை செய்ய உதவுவதற்குமே நாம் அரசுகளுடன் இணக்க அரசியல் நடத்தினோம்.

இன்று யுத்தம் இல்லாத பசுந்தரையில் நடப்பதுபோலான காலத்தில் அரசுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, பிள்ளைகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்டுவதற்கு ஜனாதிபதியை அழைப்பதற்கும், வெளிநாட்டுப் பயணங்களுக்கு அரச உதவியைப் பெறுவதற்கும், வரி ஏய்ப்புச் செய்து சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்குமே அரசுடன் இணக்க அரசியல் நடத்துகின்றார்கள்.

இந்த உண்மைகளை ஜீரணித்துக் கொள்ள சிலருக்கு கஸ்டமாகத்தானிருக்கும். தமிழ் மக்களின் வலிகள் நிறைந்த வரலாற்றை உணர்வு பூர்வமாக அனுபவித்தவர்களுக்கும், போராட்ட வரலாற்றை அதன் வேர்களிலிருந்து கவனிப்பவர்களுக்கும் நான் குறிப்பிடும் கருத்துக்களின் நியாயம் புரியும் என பதிவிடப்பட்டுள்ளது.

Related posts: