இடைநிறுத்தப்பட்ட ஜப்பான் திட்டங்களுக்கு மீண்டும் 1.6 பில்லியன் வழங்கும் – ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவிப்பு!

Friday, March 10th, 2023

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதியுதவிக்கான ஒப்புதல், ஜப்பானால் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களுக்கு மீண்டும் 1.6 பில்லியன் டொலர்கள் கிடைப்பதற்கு வழியேற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் வரும்போது, பல்வேறு கட்டங்களில் உள்ள பல திட்டங்களை, மீண்டும் செயற்படுத்த ஜப்பானிய அரசாங்கத்தை நம்ப வைக்க முடியும் என்று அரச அதிகாரி ஒருவர் கூறியதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மேம்படுத்தலுக்கான 74 பில்லியன் யென்னும் உள்ளடங்கும்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் பிணையெடுப்பு நிதியான 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கினால், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி உட்பட மற்ற கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கையால் நிதியுதவியை பெற்றுக்கொள்ளமுடியும் என்று இலங்கை அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும் கடன்களுக்கான திருத்தப்பட்ட காலக்கெடுவுடன் இலங்கை புதிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட வேண்டியிருக்கலாம் என்று தமது பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவரை கோடிட்டு ரொய்ட்டர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: