இடைக்கால தடை தொடர்பில் ஆராய மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு செல்லும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க!

Monday, November 13th, 2023

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை தொடர்பில் ஆராய மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அங்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையாயின், உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்காக இடைக்கால நிர்வாக குழுவொன்றை நியமித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த நீதி பேராணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனைவிட, இடைக்கால நிர்வாக குழுவின் உறுப்பினர்கள் அந்த பதவிகளில் பணியாற்றுவதைத் தடுக்கும் வகையிலும், விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளின் நடவடிக்கைகளில் தலையிடுவதைத் தடுக்கும் வகையிலும் மேலும் 2 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று இடைக்கால தடை உத்தரவுகளும் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் நிலையில் இந்த மனு எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகக் குழு மேற்கொண்ட ஊழல், முறைகேடுகள் மற்றும் சந்தித்த கடுமையான தோல்விகள் குறித்து கணக்காய்வாளர் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகக் குழுவை இடைநிறுத்தி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால நிர்வாகக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்திருந்தார்.

இதேவேளை, கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க, இன்றையதினம் ஊடகங்களுக்கு விசேட அறிவித்தலொன்றை விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இடை நிறுத்தியமைக்கு பின்னால் இருந்து செயற்பட்ட நபர்கள் குறித்து விசாரிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: