ஆறு மாதங்களுக்குப் பின் பாடசாலைகள் இன்று மீள ஆரம்பம் – ஆசிரியர்களின் வருகையில் வீழ்ச்சி – மாணவர்கள் அசௌகரியம்!

Thursday, October 21st, 2021

நாடளாவிய ரீதியில் 200 இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  இருந்’தபோதிலும், மாணவர்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது.

கொவிட்-19 பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், ஆறு மாதங்களின் பின்னர் இன்றையதினம் மீள திறக்கப்பட்டன.

இந்நிலையில் ஆசிரியர் – அதிபர் சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்றையதினம் பெரும்பாலான பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சில பாடசாலைகளில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சமுகமளித்திருந்ததோடு, கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தங்களது தொழிற்சங்க நடவடிக்கை இன்றையதினம் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாளைய தினமும் தொழிற்சங்க நடவடிக்கை, முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும், பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவடைந்திருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஆசிரியர்களின் வருகையும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தாம் கண்காணிப்புக்குச் சென்ற சில பாடசாலைகளில் அதிபர்கள், ஆசிரியர்கள் பொறுப்புடன் கடமைக்கு சமுகமளித்திருந்தாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தாம் முன்னதாக கூறியதுபோல நாடுமுழுவதும் பயிலுநர் பட்டதாரிகள், ஆசிரியர்கள், அதிபர்கள் பாடசாலைக்கு சமுகமளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

000

Related posts: