ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!
        
                    Monday, November 1st, 2021
            
பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் இன்று முன்பள்ளி மாணவர்களின் சுகாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் – கொரோனா காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பித்தது.
ஆனாலும் மீண்டும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில் முன்பள்ளி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிக்க பல்வேறு வேலைத்திட்டங்களை கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 223 முன்பள்ளி பாடசாலைகளுக்கு தலா ஒரு பாடசாலைக்கு 6 இலட்சம் ரூபா என்ற வகையில் உபகரணங்கள் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் முன்பள்ளி மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக முன்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
இவர்களின் மாதாந்த கொடுப்பனவு ஓய்வு ஊதியம் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தி கலந்துரையாடல்களை மேற்கொண்டு உள்ளது. விரைவில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வு ஊதியம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
| 
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                         | 
                    
  | 
                
            
        

