ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
Saturday, March 9th, 2024
ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் இரண்டும் எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின தேசிய கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டத்தின் பிரகாரம் தனியான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசியலமைப்பின்படி பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கும் வலுவூட்டலுக்குமான ஏற்பாடுகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ஆண், பெண் சமூக அடிப்படையைக் கொண்ட பாதீட்டு திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், இது ஆசியாவிலேயே முதன்முறையாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் மகளிர் தொடர்பான தேசிய ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பெண்களை பலப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்த தேசிய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுவதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


