ஆடை கைத்தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு விசேட நிகழ்ச்சித்திட்டம் – ஜனாதிபதி!

Tuesday, March 16th, 2021

ஆடை கைத்தொழிற்துறை தற்போது முகங்கொடுத்துள்ள சவால்களை அடையாளம் கண்டுள்ள அரசாங்கம், அதன் உற்பத்தித் திறனையும் தரத்தையும் அதிகரிப்பதற்கு முழுமையான அனுசரணையை வழங்க தயாராக உள்ளதாக கூறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கென திட்டமிட்ட வகையில் நிகழ்ச்சித்திட்டமொன்றின் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த ஆடைகள் சங்க அமைப்பின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் ஏற்றுமதியை இலக்காகக்கொண்ட கைத்தொழிற் துறைகளுக்கு மத்தியில் ஆடைக் கைத்தொழிற்துறை முக்கிய இடம் வகிக்கின்றது. இலங்கையை உயர்தரம் வாய்ந்த ஆடைகளுக்கான உலகளவில் போற்றப்படும் தரச்சின்னமாக மாற்றும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில் உள்நாட்டு ஆடைகள் தொழிற்துறையில் புதியதொரு எழுச்சியை ஏற்படுத்தி பாரிய அந்நியச் செலாவணியை ஈட்ட முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் குறித்த இலக்கை அடைவதற்கு அரசாங்கம் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருவதுடன், இதன்மூலம் இவ்வருடம் எதிர்பார்க்கப்படும் இலக்கு 5.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்பதுடன் எதிர்பார்க்கப்படும் இலக்கை அடைந்து கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் வர்த்தகர்கள் இதன்போது ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர்.

அத்துடன் சுகாதார நடைமுறைகள் காரணமாக இத்தொழிற்துறையின் முன்னேற்ற பயணத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்தும் வர்த்தகர்கள் தெளிவுபடுத்தினர்.

இத்தொழிற்துறையின் மனிதவள பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், தரம் மற்றும் பாதுகாப்பான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் இத்தொழிற்துறைக்கு இளைஞர், யுவதிகளை ஈர்க்க முடியுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: