ஆசிரியர்கள் – மாணவர்களை வாரமொன்றில் தலா 3 நாட்களுக்கு பாடசாலைக்கு அழைக்க அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை முன்வைப்பு!

Saturday, June 11th, 2022

எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பதற்கு, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை முன்வைத்துள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவுக்கும், அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்துக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், தூரப் பிரதேசங்களில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை, அருகிலுள்ள பாடசாலைகளுக்கு இணைப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை, பிரயோக ரீதியாக பயன்படுத்துவதற்கான முறைமை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எதிர்வரும் 13 ஆம் திகதி அரசாங்க விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றையதினம் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி திங்கள்கிழமை விசேட அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்களுக்கு அன்றையதினம் விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இது அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கு இடையூறாக இருக்கக் கூடாது எனவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பொசன் பௌர்ணமி தினமான ஜூன் 14 ஆம் திகதி ஏற்கனவே அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

000

Related posts: