அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே விசேட சந்திப்பு – இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராய்வு!

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனீ வோங்கிற்கும் (Penny Wong) இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (09) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, “இந்து சமுத்திரத்தை நோக்கி அதிகாரத் தளங்கள் மாறுவதன் மூலம், பிராந்தியத்தில் அவுஸ்திரேலியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது ஒரு முக்கியமான படியாகும்” என ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் இலங்கையில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி, அத்துறையில் ஏற்கனவே பல அவுஸ்திரேலிய நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்
“கொழும்பு முறைமை” வரையிலான இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் குறித்து இங்கு நினைவுகூரப்பட்டதுடன், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல புதிய துறைகளின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|