அவுஸ்திரேலிய பிறிஸ்பேன் ஆடுகளத்திற்கு சராசரிக்கும் குறைவான மதிப்பீடு!
Wednesday, December 21st, 2022
அஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்ததை அடுத்து, பிறிஸ்பேன் ஆடுகளத்திற்கு சராசரிக்கும் குறைவான மதிப்பீட்டை சர்வதேச கிரிக்கெட் பேரவை வழங்கியுள்ளது.
தென் ஆபிரிக்கா அதன் இரண்டு இன்னிங்ஸிலும் 152 ஓட்டங்களையும் 99 ஒட்டங்களையும் எடுத்தது.
அவுஸ்திரேலியா அதன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 218 ஓட்டங்களையும் 4 விக்கெட் இழப்புக்கு 35 ஓட்டங்களையும் எடுத்து 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
இரண்டு நாட்களுக்குள் (டிசம்பர் 17 – 18) நிறைவடைந்த அப் போட்டியில் 144.2 ஓவர்களில் மொத்தமாக 34 விக்கெட்களுக்கு 504 ஓட்டங்கள் பெறப்பட்டன.
அப் போட்டியில் பொது மத்தியஸ்தராக கடமையாற்றிய ரிச்சி ரிச்சர்ட்சன் கூறியதாவது: ‘ஒட்டுமொத்தத்தில் இந்த டெஸ்ட் போட்டிக்கான கபா ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. அதிகமான பவுன்ஸ் இருந்ததுடன் அவ்வப்போது சீம் அசைவும் மிதமாக இருந்தது.
‘இரண்டாம் நாளன்று சில பந்துவீச்சுகள் தாழ்வாகவே சென்றன. இதன் காரணமாக துடுப்பாட்ட வீரர்கள் சிரமத்தை எதிர்கொண்டதுடன் அவர்களால் சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்த முடியாமல் போனது. ஐசிசி வழிகாட்டுதலின் பிரகாரம் ஆடுகளம் சராசரி தன்மைக்குக் குறைவாக இருந்ததை அவதானித்தேன். ஒட்டுமொத்தத்தில் துடுப்பாட்டத்திற்கும் பந்துவீச்சுக்கும் சமமான போட்டியாக இது அமையவில்லை’ என ரிச்சர்ட்சனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிரிக்கெட் ஓஸ்ட்ரேலியாவுக்கு (அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம்) அனுப்பப்பட்டுள்ளது.
அப் போட்டியில் அவுஸ்திரேலியா சார்பாக முதலாவது இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 117 ஓட்டங்களே அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் திகதி மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.இது இவ்வாறிருக்க, இதற்கு முன்னர் ராவல்பிண்டி ஆடுகளமும் சராசரிக்கு குறைவான மதிப்பீடு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


