அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலியா 50 மில்லியன் டொலர் உதவி – அவுஸ்திரேலியாவின் விசேட பிரதிநிதியும் இலங்கை வருகை!

Monday, June 20th, 2022

இலங்கையில் இருந்து அதிக அளவான ஏதிலி படகுகள் அவுஸ்திரேலியாவுக்கு செல்கின்ற நிலையில், அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் இலங்கைக்கு விசேட பிரதிநிதி ஒருவரை அனுப்புகிறது.

அந்தநாட்டில் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் தெரிவானதன் பின்னர், இலங்கையில் இருந்து பல படகுகளில் ஏதிலிகள் சென்றுள்ளனர்.

அவர்கள் அனைவரும் எல்லையில் தடுக்கப்பட்டு அவுஸ்திரேலிய அதிகாரிகளால் நாடுகடத்தப்படுகின்றனர்.

இந்தநிலையில் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு பிரவேசிக்கின்ற அனைவரும், அங்கு குடியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள் என்றும் செய்தியை வழங்கும் வகையில், அவுஸ்திரேலியா தமது உள்துறை அமைச்சர் க்ளெயார் ஓநீலை இலங்கைக்கு அனுப்புகிறது.

இன்று இலங்கை வந்தடையும் அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவார்.

இதன்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அவுஸ்திரேலியாவால் எவ்வாறு உதவ முடியும் மற்றும் ஏதிலி படகுகளை தடுப்பதற்கான வழிகள் குறித்து அவதானம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே

இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலியா 50 மில்லியன் டொலர் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிகளை வழங்கவுள்ளது.

இலங்கையில் உள்ள அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இது மருந்து, உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது.

இலங்கையில் உள்ள, 3 மில்லியன் மக்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய அவசர உணவு உதவிக்காக உலக உணவு திட்டத்திற்கு, அவுஸ்திரேலியா உடனடியாக 22 மில்லியன் டொலர்களை வழங்குவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா 2022-23 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 23 மில்லியன் டொலர்களை அபிவிருத்தி உதவியாக வழங்கவுள்ளது. இது சுகாதார சேவைகள் மற்றும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நன்கொடைகள் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட 5 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக வழங்கப்படுவதாக உயர்ஸ்தானிகரத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: