அறுபது கோடி ரூபா நட்டத்தில் இயங்கும் லங்கா சதொச – கோப் குழு சுட்டிக்காட்டு!

Wednesday, June 28th, 2023

லங்கா சதொச நிறுவனத்திற்கு 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் அறுபது கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.

லங்கா சதொச நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக கோப் குழு தலைவரின் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் மனித பாவனைக்காக கொண்டு வரப்பட்டு கால்நடை தீவனத்திற்காக விற்பனை செய்யப்பட்ட அரிசியின் கையிருப்பு காலாவதியானதால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் இது தொடர்பில் மேலும் கலந்துரையாட கோப் குழு தீர்மானித்துள்ளது. லங்கா சதொச நிறுவனத்திற்கு பொருத்தமான வர்த்தக மாதிரி ஒன்றை தயாரித்து அதனை இலாபகரமானதாக மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லங்கா சதொச நிறுவனம் 2021 முதல் 2024 ஆம் ஆண்டிற்கான முறையான திட்டத்தைக் கொண்டுள்ள போதிலும் இதுவரையில் அவை அங்கீகரிக்கப்படவில்லை எனவும் கோப் குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், 2028 ஆம் ஆண்டு வரை விரிவான திட்டத்தை தயாரித்து, அதன் செயற்பாடுகள் குறித்து 2 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் திகதி மீள அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: