அறிவை ஜனநாயகப் படுத்துகின்ற பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்: பேராசிரியர் சின்னத்தம்பி பாராட்டு

Wednesday, April 6th, 2016

எமது நாட்டின் கல்வித்துறை என்பது பரந்துபட்டதொன்று. பொதுவாக அரசாங்கத்தினுடைய பணத்தில் , அரசாங்கத்தினுடைய கருத்துக்களை ஒவ்வொரு கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக் கதவுகளையும் தட்டக் கூடிய விடயமாகப் பாடசாலைக் கல்வி காணப்படுகின்றது. அறிவை ஜனநாயகப் படுத்துகின்ற பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆசிரியர்களை வலுவூட்டாமல் , அவர்களுடைய சிந்தனைகளைப் புதிதாக முனைப்படையச் செய்யாமல் எங்களால் தேசிய ரீதியான மாற்றங்களைக் கொண்டுவர முடியாது என பேராசிரியர் ம. சின்னத்தம்பி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் ப. ராஜேஸ்வரன் எழுதிய ‘கல்வியியலாளன்’ ஆய்வு நூலின் வெளியீட்டு விழா கடந்த   திங்கட்கிழமை( 04-) மாலை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பீடாதிபதி சதாசிவம் அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

அறிவுத் தொழிலாளியாகக் காணப்படுகின்ற ஆசிரியர்கள் இன்றைய அறிவுப் பொருளாதாரத்தில் மிக முக்கியமானவர்கள். ஒரு காலத்தில் நிலம் வைத்திருந்தவன் செல்வந்தனாக இருந்தான். பிறிதொரு காலத்தில் முதலீடுகளைக் கொண்டிருந்தவன் செல்வந்தனாக இருந்தான். ஆனால், தற்போது அறிவைக் கொண்டிருப்பவன் தான் உயர்ந்தவனாகக் காணப்படுகிறான். அதிகம் உழைக்க வேண்டுமானால் , செல்வந்தனாக வர வேண்டுமானால் நாம் நிறையக் கற்க வேண்டும். கல்வி கற்பவன் வசதியாக வாழ்வான்.

நான் சிறுவனாக இருந்த போது புலவர்களைப் பற்றிப் படித்திருக்கிறேன். புலவர்கள் என்றாலே புலமையும் , வறுமையும் அவர்களுடன் பிரிக்க முடியாதவாறு காணப்பட்டதாக  நாங்கள் வரலாற்று ரீதியாக அறிகிறோம்.  தற்போது புலமையும் செல்வமும், அறிவும் வசதியும் , அறிவும் வாழ்க்கையும் நிறைந்ததொரு விரிவாக்கமான  வாழ்க்கைச் சூழலில் வாழ்கிறோம். நானும் ஒரு அறிவுத் தொழிலாளி. விரிவுரையாளன். நான் எந்தவிதக் குறையுமில்லாமல் இருக்கிறேன். ஆகவே, இந்த அறிவு ரீதியான பற்றுதல், அறிவு ரீதியான நேர்முகப் பார்வை தற்போது விரிவடைந்திருக்கிறது.

அறிவை உருவாக்குதல், அறிவை முகாமை செய்தல், அறிவை விநியோகித்தல், அறிவை உற்பத்திகளாக மறு பிரசவம் செய்தல் ஆகிய பணிகள்  இன்று உலகம் முழுவதும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.  ஒரு காலத்தில் நாங்கள் வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்தோம். ஆனால், தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பல்கலைக் கழகங்களிருந்து பேராசிரியர்களையும், விரிவுரையாளர்களையும், ஆய்வாளர்களையும் வரவழைத்துக் கொண்டிருக்கிறோம்.  இவ்வாறு உலகமயமாதலில் அறிவினுடைய ஆற்றல் ஒரு ஆயுதமாக, மிகப் பெரும் வலுவாக மாற்றம் பெற்றுள்ளது. இவ்வாறான நிலை உருவாகுவதற்கு அடிப்படையாக ஆராய்ச்சி அமைந்து காணப்படுகின்றது.  ஆகவே, இந்த மிகு தேடல் என்பது இன்றைய காலத்தில் மிக முக்கியமானது .

இன்றைய காலத்தில் வசதி கிடைக்கும் போது நாம் ஒவ்வொருவரும் எங்களைச் சந்தைப்படுத்திக் கொள்ள வேண்டும். உன்னை விலை தரக் கூடியவர்களுக்கு உன்னுடைய பெறுமானங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் தற்போதைய உலகு. எங்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கும் போதெல்லாம் பொருத்தமான இடங்களில் எங்களுடைய திறமைகளை, முனைப்புக்களை, தேடல் , ஆசைகளை நிச்சயம் வெளிப்படுத்த வேண்டும். அடக்கமுடைமை என்பது தற்காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத பயத்துடன் சம்பந்தப்பட்ட விடயமாகக் கருதப்படுகிறது. உங்களால் நுட்பமாகச் சிந்திக்க முடியாவிட்டால், ஏற்றுக் கொள்ளத்தக்கவளவில் பேச முடியாவிட்டால் அதனையே நாம் அடக்கமுடமையாகக் கருத வேண்டியுள்ளது. ஆனால், அறிவு என்பது சவால்களுக்கு உரியதொன்றாகத் தற்காலத்தில் மாறியிருக்கிறது. அந்த வகையில் ஆராய்ச்சியில் ஈடுபடுவது பெரிய விடயமல்ல. அதனைப் பலர் முன்னாள் வழங்குவது தான் முக்கியமானது. அறிவைப் பரப்புவது  தான் ஆய்விதழின் நோக்கமாக இருக்க வேண்டும் .

ஒருபோதும் ஏணிகள் ஏறிப் போவதில்லை. ஆனால்,ஏணியில் பலர் ஏறிப் போகிறார்கள். இன்றைய உலகில் பல நாடுகள் சேர்ந்து ஆய்வுகளைச் செய்கின்றன. உலகிற்கு வெளியே விண்வெளி  ஆய்வு மையத்தை நிறுவி எத்தனையோ நாடுகள் பல மில்லியன் கணக்கான பணத்தை முதலீடு செய்து ஆய்வு செய்கிறார்கள். இணைந்து கற்றல் , இணைந்து பணியாற்றுதல், பல துறைகளுடன் கைகோர்த்து ஆய்வு செய்தல் எனப் பல புதிய திசைகளில் எங்களுடைய ஆய்வு முயற்சிகளை நகர்த்த வேண்டும். அந்த வகையில்  இந்த ஆய்விதழூடாக முதற் புள்ளி இடப்பட்டிருக்கிறது. இதனை மிகப் பெரும் கோலமாக உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் . ஆய்வு முயற்சிகள்  தொடர வேண்டும்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் முதலாவது அணி மாணவனாகவும், தற்போதைய விரிவுரையாளராகவும் காணப்படும்  ராஜேஸ்வரன் மிகுந்த முனைப்புடையவர். பொதுவாக அவருடன் கதைக்கும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மனிதர்களைப் பற்றிப் பேசமாட்டார். விடயங்களை மட்டுமே பேசுவார்.  அந்த வகையில் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் பழைய ஆசிரிய மாணவனும், புதிய விரிவுரையாளருமான ராஜேஸ்வரன் ஆய்வு முயற்சியில் அடுத்த கட்டத்தை நோக்கி உங்களை அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார். அவருடைய ஆய்வு முயற்சியை நான் மதிக்கிறேன். பாராட்டுகிறேன் என்றார்.

Related posts:

தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விரைவில் அறிவிப்பார் - பொலிஸ் ஊடகப் பேச்...
அரசியல் பழிவாங்கல் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு - இதுவரை 1842 முறைப்பாடுகள் கிடைத்துள்ளத...
அத்தியவசிய சேவை ஊழியர்களுக்காக விசேட ரயில் சேவை - ரயில் போக்குவரத்து அத்தியட்சிகர் தெரிவிப்பு!