அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்படுங்கள் – மீண்டுமொரு தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Monday, November 15th, 2021

தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாகக் குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம் உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நவம்பர் 15ஆம் திகதியளவில் வட அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அது தொடர்ந்தும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18ஆம் திகதியளவில் ஆந்திரப் பிரதேசத்திற்கு அண்மையான கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும்.

அதேவேளை வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்கால முன்னறிவிப்புகளுக்கு ஏற்ப, பொதுமக்கள் செயற்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர்வரை அதிகரித்த வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாகக் காலி வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் குறித்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: