அறிவிக்கப்பட்ட தினத்தில் அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடத்தப்படும் – வடக்கின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு!

Wednesday, August 10th, 2022

பரீட்சைகளை ஒத்திப்போடுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. அறிவிக்கப்பட்ட காலத்தில் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், இந்த மாதத்துக்குள் 05 நாட்களும் பாடசாலைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும்  தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய 27ன் கீழ் 2 கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் –

கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலை பாதிப்பு காரணமாக கடந்த இரண்டரை வருடகாலமாக கல்வித்துறை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2020 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதுடன் பாடத்திட்டங்களையும் முழுமைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நலன் கருதி விசேட கற்பித்தல் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்களின் ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திட்டமிட்ட வகையில் பரீட்சைகள் நடத்தப்படும். 2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேற்றை இம்மாதத்துக்குள் வெளியிட தீர்மானித்துள்ளோம்.

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை கல்வி நடவடிகைகள் தற்போது கட்டம் கட்டமாக சீர் செய்யப்பட்டு வருகிறது. எரிபொருள் நெருக்கடிகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டு வரும் நிலையில் இம்மாதத்துக்குள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைளை வழமைக்கு கொண்டு வர முடியும்.

இக்காலங்களில் பாடசாலைக்கு வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நோக்கும் போது வடக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

வடக்கிலுள்ள மாணவர்கள் யுத்த காலத்திலும் கல்விக்கு முன்னுரிமை வழங்கினர். இப்போதும் அத்தகைய நிலை காணப்படுகின்றமை தொடர்பில் மகிழ்ச்சியுற முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

000

Related posts: