பட்டியலோடு வராவிட்டால் 58 ஆவது டிவிசன் தளபதிக்கு பிடியாணை – நீதிவான் எச்சரிக்கை

Saturday, May 21st, 2016

இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளின் விபரங்களை, வரும் ஜூலை 14ஆம் நாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், இலங்கை இராணுவத்தின் 58ஆவது டிவிசன் கட்டளை அதிகாரிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமற்போன, எழிலன் உள்ளிட்டவர்களின் சார்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணைகளின் போதே முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிவான் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

வவுனியா மேல்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இதுதொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைகளில் இலங்கை இராணுவத்தின் சார்பில் முன்னிலையாகியிருந்த, 58ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்த்தன, இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகள் தொடர்பான பட்டியல்கள் அடங்கிய ஆவணம், தமது படைப்பிரிவுத் தலைமையகத்தில் இருப்பதாக கூறியிருந்தார்.

அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அவருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேஜர் ஜெனரல் குணவர்த்தன, சரணடைந்த போராளிகளின் பட்டியலைச் சமர்ப்பிக்கவில்லை.

இதையடுத்து, மே 19ஆம் நாளுக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டு, குறிப்பிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது. மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தனவோ, அவரது சார்பில் சட்டவாளரோ முன்னிலையாகவில்லை.

இதையடுத்து, இந்த வழக்கை ஜூலை 14ஆம் நாளுக்குஒத்திவைத்த நீதிவான், அன்றைய நாள், சரணடைந்தவர்களின் பட்டியலுடன், மேஜர் ஜெனரல் குணவர்த்தன நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறினால், பிடியாணை பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

Related posts:

வடக்கு மாகாணசபையின் இன்றைய நிலைகண்டு வெட்கி தலைகுனிய வேண்டியுள்ளது - ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை ...
வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான தேர்தல் சட்ட மீறல் - தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பு எச்ச...
கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சிறிதளவு அதிகரித்த போதிலும், கடந்த ஒக்டோபரில் நிலவிய நெரிசல் குறைந்துள்ளத...