அரிசி கையிருப்பு அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானது – அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Thursday, August 24th, 2023

தற்போது கையிருப்பில் உள்ள அரிசி, அடுத்த பெரும்போக  அறுவடை வரை போதுமானதாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு தேவையான மூன்று வகையான உரங்களையும் உரிய நேரத்தில் வழங்கியதாலும் நிதி உதவி அளித்ததன் காரணத்தினாலும் கடந்த பெரும்போகம்   வெற்றியடைந்ததாகவும், வறட்சி இல்லாத ஏனைய மாகாணங்களில் அதிக அறுவடை கிடைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகள் பிரிவின் ஏற்பாட்டில் நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற  “விவசாயத்துறையின்  நவீனமயமாக்கல் மற்றும் அதன் சவால்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற துறைசார் நிபுணர் கலந்துரையாடலில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.

இதன்போது அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறுகையில் –

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்றபோது,விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். விவசாயிகளை மீண்டும் விவசாய வயல் நிலத்திற்குக் கொண்டுவருவது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

அந்த சமயம் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பித்திருந்தன. 275,000 ஹெக்டெயாரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தாலும் உரம்  இருக்கவில்லை. தேவையில் லாமல் மக்களை பயமுறுத்துவதாக சிலர் குற்றம் சாட்டினாலும், சர்வதேச சமூகமும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று அறிவித்திருந்தது.

எப்படியோ விவசாயியை மீண்டும்  வயில்  நிலங்களுக்கு அனுப்பினோம். அதன்படி, 10 வருடங்களின் பின்னர், சிறுபோகத்தில் 512,000 ஹெக்டெயாரில் பயிர்ச் செய்கை செய்வதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்தது.

பின்னர்  பெரும்போகத்தில்  08 இலட்சம் ஹெக்டெயாரில் பயிர்ச்செய்கை செய்யப்பட்டது. அந்த ஆண்டில் 08 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி  இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடமும் அரிசியை இறக்குமதி செய்ய நேர்ந்தால் பாரிய பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும். ஏனெனில் தற்போது இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

எவ்வாறாயினும், பெரும்போக அறுவடை வெற்றிகரமாக இடம்பெற்றதாலும் மூன்று வகையான உரங்களும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதாலும், நிதி நிவாரணம் வழங்கப்படுவதாலும், எதிர்வரும்  பெரும் போக   அறுவடை வரை எங்களிடம் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது.

மேலும் தற்போது நிலவும் வறட்சியால் சுமார் 75 ஆயிரம் ஏக்கர் வயல் நிலம்  நாசமாகியுள்ளது. ஆனால் வறட்சி இல்லாத ஏனைய மாகாணங்களில் விளைச்சல்  மிகவும் அதிகமான உள்ளது. எனவே, வெளிநாடுகளில் இருந்து அரிசி கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது நெல் மற்றும் அரிசி விலைகள் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும். விவசாய அமைச்சர் என்ற ரீதியில் நெல் விலை உயர்வை நல்லதொரு நிலையாக கருதுகின்றேன். எனினும் நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதை அனுமதிக்க முடியாது.

எனவே, நெல் மற்றும் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த பொருத்தமான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். எங்களிடம் உள்ள குறைந்த அளவிலான நிலத்தில் அதிக  அறுவடையைப்  பெறுவதற்கு ஏற்ற வகையில்  பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.

விவசாயிகளை முறையாக அறிவூட்டாமை தொடர்பான குறைபாடு  அடையாளங் காணப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட விவசாயத் தலைவர்கள் விவசாயிகளை சரியான அறிவூட்ட நடவடிக்கை எடுக்காமல்  இருப்பதைக் காணமுடிகிறது. எனினும் அரசியலின்றி  விவசாயிகள் மத்தியில் சரியான தகவல் எடுத்துச் செல்லப்பட்ட  ஹம்பாந்தோட்டை மாவட்டம் இந்த வருடம்  சிறந்த  விளைச்சலைப் பெற்றுள்ளது.

சரியான விதை நெல் தொடர்பான தகவல்களை விவசாயிகள் மத்தியில் கொண்டுச் செல்லத் தவறும் பட்சத்தில் அந்தச் செயற்பாடுகள் வெற்றியளிக்காது. அதேபோல் புதிய தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் அதன் பலன்கள் தொடர்பான விடயங்களை விவசாயிகள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். அவை சாத்தியமடையும் பட்சத்தில் எமது விளைச்சல் நிலங்களில் தன்னிறைவான விளைச்சலை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டும். 

புதிய தொழில்நுட்பம் தொடர்பில் கூறுவதாயின் 2018 இல் DJC மாமர நடுகைத் திட்டம் ஏக்கருக்கு 80 கன்றுகள் என்ற அடிப்படையிலேயே ஆரம்பிக்கப்பட்டது.  தொழில்நுட்ப பயன்பாட்டின் பலனாக அந்த எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது. 2018  வாகரை பகுதியில்    பச்சை வௌ்ளரிக்காய் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு செலவிடப்பட்ட தொகையையும் மிஞ்சிய இலாபத்தை தருகிறது. அதேபோல் மிளகாய், மாதுளை, புளி வாழைப்பழ உற்பத்தி ஆகியனவும் தொழில்நுட்ப பயன்பாட்டினால் சிறந்த பிரதிபலனைத் தருகின்றன.   

விளைச்சல் செயற்பாடுகள் தொடர்பில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு கடன் வசதிகளை பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும், இன்றளவில் விவசாயிகள் தங்களது பிள்ளைகளும் விவசாயிகளாவதை விரும்புவதில்லை. அந்த எண்ணக்கருவை நாம் மாற்றியமைக்க வேண்டும். அந்த அனைத்துச் செயற்பாடுகளிலிலும் வெற்றிகாண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: