அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பயன்பாட்டிற்காக நாடு முழுவதும் 19 புகையிரதங்கள், 4 ஆயிரம் பேருந்துகள் சேவையில் – போக்குவரத்து அமைச்சு தெரிவிப்பு!

Monday, May 18th, 2020

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பணிகளுக்காக 19 புகையிரதங்கள் மற்றும் நான்காயிரத்திற்கு அதிகமான பேருந்துகள் இன்றுமுதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த முடியாது எனவும் அடுத்த வாரமே பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பும் எனவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் பொதுப்போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனை மேலும் அதிகரிக்க போக்குவரத்து சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய தற்போதுவரை 7 புகையிரதங்கள் மாத்திரம் நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்றுமுதல் 19 புகையிரதங்கள் நாட்டில் சகல பகுதிகளில் இருந்தும் கொழும்பை வந்தடையும் வகையில் ஏற்பாடு  செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த போக்குவரத்து அமைச்சு நாடளாவிய ரீதியில் நான்காயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

எவ்வாறு இருப்பினும் இந்த போக்குவரத்து சேவைகள் அனைத்துமே அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பணிகளை முன்னெடுக்க செய்துகொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் மட்டுமேயென கூறும் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர, இன்று தொடக்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பொதுப்போக்குவரத்து சேவைகளை வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்ட போதிலும் அதற்கான ஏதுநிலைகள் இன்மையால் அடுத்த வாரம் வரையில் பொறுத்திருக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுநோய் நிலைமைகள் மாற்றம் பெறவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்து வருகின்ற நிலையில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுப்போக்குவரத்தை நிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறிய அமைச்சர் இந்த வாரம் முழுவதும் நிலைமைகளை கருத்தில் கொண்டு அடுத்த வாரம் தொடக்கம் அச்சுறுத்தல் இல்லையென கருதப்படும் பிரதேசங்களுக்கான பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியும் எனவும் ஆனால் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்தை முன்னெடுக்க இப்போது அனுமதிக்க முடியாத நிலைமை இருப்பதாகவும் அவர்  மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: