அரச தலைவரின் சிம்மாசன உரையுடன் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடுகிறது இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்றம் – இரண்டு நாள் விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானம்!

Wednesday, January 12th, 2022

அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை அறிக்கையை வெளியிட்டு புதிய நாடாளுமன்ற அமர்வை இம்மாதம் 18 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி அரசதலைவர் ஆற்றவுள்ள அக்கிராசன உரை தொடர்பில் இரண்டு நாள் நாடாளுமன்ற விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, எதிர்வரும் ஜனவரி மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், அரசியலமைப்பின் 33 (அ) பிரிவின் கீழ் அரச தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியதைத் தொடர்ந்து ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபையின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

முன்னாள் பிரதமர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: