அரச சொத்துக்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் – மீறி செயற்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை என எச்சரிக்கை!

Saturday, January 7th, 2023

அரச சொத்துக்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி 340 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பிலாள அறிவித்தல் வெளியிடப்பட்டது.

அன்றிலிருந்து தேர்தல் நடத்தப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கிடையிலான காலப்பகுதி தேர்தலுக்கான காலம் என அடையாளப்படுத்தப்படுகிறது என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் அரசியல் கட்சிகள், குழுக்கள் என்பன வேட்பாளர்கள் தொடர்பில் பிரசாரங்கள் மேற்கொள்ளல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு அரச சொத்துக்களை உபயோகிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் இடம்பெறவுள்ள மாவட்டங்களில் அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட செயற்பாடுகளும் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அரச சொத்துக்களுக்கு பொறுப்பான அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள் உள்ளிட்ட அனைவரிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் 104 (ஆ) (4) (அ) உறுப்புரைகளுக்கமைய அரச சொத்துக்களை தேர்தல் பிரசார பணிகளுக்காக உபயோகிப்பதற்கு தடை விதிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளது.

குறித்த உறுப்புரையின் (ஆ) பிரிவிற்கமைய ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் கட்டளைகளுக்கு அனைத்து தரப்பினரும் இணங்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மாறாக அவற்றை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு, அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஒரு இலட்சம் தண்டப்பணம் அல்லது இரு தண்டனைகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: