அரச சுற்றுநிருபங்களுக்கு புறக்கணிக்கும் செயற்பாடு – மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு பதிலளிக்கமுடியாது தப்பி ஓடிய யாழ். மாவட்ட செயலர்!

Monday, March 14th, 2022

மாவட்டத்தினதும் பிரதேசங்களினதும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத் திட்ட செயற்பாடுகளின்போது, அரச கொள்கைக்கும் அரச சுற்று நிருபங்களுக்கும் முரணான யாழ் மாவட்ட செயலகம் நடந்துகொள்வதாக தெரிவித்து இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்று நடைபெற்றது.

குறித்த போராட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து யாழ் மாவட்ட செயலகம் முன்பாக கண்டனப் போராட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் நலத் திட்டங்களை தூக்கி எறியாதே…

மாவட்டச் செயலகமே அரசாங்கத்தின் சுற்று அறிக்கைகளை நீங்கள் கற்று அறிவதில்லையா, மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள், மக்களுக்கு விசுவாசமாய் இருக்க மறுப்பது ஏன்?, சுயநலவாதிகளுக்கு துதிபாடும் அதிகாரிகளே உங்களிடம் இருப்பது முதுகெலும்பா என்று தொட்டுப் பாருங்கள், ஒரு வீதியை புனரமைக்க இரண்டு திட்டங்களில் நிதி ஒதுக்கப்படுவது, யாருக்காக? – நடக்கின்ற பகல் கொள்ளையில் அதிகாரிகளும் பங்குதாரர்களா?, மாவட்டச் செயலகமே!  இதுஅரசசெயலகமா? அல்லதுஅரசியல் செயலகமா?, யாழ்.செயலகமே! “கை”வரிசையாளர்களுக்கு ஏன்  “கை”யாளானாய்!, அரசசுற்றுநிருபத்தை நடைமுறைப்படுத்து, அரசு அதிகாரி என்ற கம்பீரத்துடன் பணிசெய கால்பிடித்து பணிசெய்யாதே, மாவட்டச் செயலகமே! இது அரசசெயலகமா? அல்லது அரசியல் வாதியின் முகவர் நிலையமா, என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு குறித்த போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் பல விடயங்களை சுட்டிக்காட்டி மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றும் சிவகுரு பாலகிருஸ்னண் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்திருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் கூறுகையில் –

யாழ்ப்பாணம் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகிய நாம், எமது மாவட்டத்தினதும் பிரதேசங்களினதும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத் திட்ட செயற்பாடுகளின்போது, அரச கொள்கைக்கும் அரச சுற்று நிருபங்களுக்கும் முரணான யாழ் மாவட்ட செயலகத்தின் பணிப்புரைகளால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இடையூறுகள் தொடர்பில் இன்றைய பொராட்டத்தினூடாக மாவட்ட செயலகத்திற்கு தெரியப்படுத்தியிருக்கின்றோம்.

மேலும் அரச கொள்கையின் பிரகாரமும் அரச சுற்று நிருபங்களின் அறிவுறுத்தல்களுக்கும் அமைவாகவும் மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு அபிவிருத்தி செயற்பாடுகளின் போதும் – தெரிவுகளை இனங்காணும் போதும் மக்களிடம் நேரில் சென்று ஆலோசித்து இறுதி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் மக்கள் நலன்கருதிய வகையில் பிரதேச அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார திட்டங்களை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது, எமது அரசின் அறிவுறுத்தல்களை புறந்தள்ளி  தன்னிச்சையான முடிவுகளை மக்களிடம் திணிக்க யாழ் மாவட்ட செயலகம் முயற்சிக்கின்றது. 

இவ்வாறான முடிவுகளை  ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாக மக்கள் வெளிப்படையாகவே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியாகிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகிய எம்மிடம் முறையிட்டு வருகின்றனர்.

அத்துடன் அண்மைக்காலமாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களில் மக்களின் தேவைகளை முன்னிறுத்திய ஆலோசனைகள் முழுமையாக புறக்கணிக்கப்படுவதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அந்தவகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் பிரகாரம் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத்தினை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் அனைத்தும் மக்களின் ஆலோசனைகளுக்கமைவான தெரிவுகளாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என யாழ் மாவட்ட செயலகத்திடம் இந்த போராட்டத்தினூடாக வலியுறுத்தியுள்ளோம்..

இதேநேரம் எமது குறித்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு நியாயமான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள யாழ் மாவட்ட செயலகம் தவறுமாயின், மக்களையும் சமூக மட்ட அமைப்புகளையும் இணைத்து யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் வகையில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கும் நிலையும் உருவாகும் என தெரிவித்திருந்தார்.

000

Related posts: