விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இராஜினாமா செய்ய தீர்மானம்!

Monday, December 25th, 2017

தொடர்ந்தும் நட்டத்தை எதிர்கொள்ளும் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சபை பதவி விலகுவதற்கு தயாராவதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை இன்று செய்தி  வெளியிட்டுள்ளது.

சானக்க டி சில்வா, ஜோசப் ராஜன் ப்ரிட்டோ, நிரஞ்ஜன் டி சில்வா தேவ ஆதித்ய, மஹிந்த ஹரதாச, நிறைவேற்றுப்பணிப்பாளர் றக்கித்த ஜெயவத்தன மற்றும் சுனில் பீரிஸ் ஆகியோர் ஶ்ரீலங்கன் விமான சேவையின் தற்போதைய பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களாக செய்படுகின்றனர்.

நிறுவனத்தின் தலைவராக அஜித் டயஸ் செயற்படுகின்றார். விமான நிறுவனத்தை மறுசீரமைக்கும் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பதவிகளை இராஜினாமா செய்வதற்கு பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டுள்ளது.

விமான நிறுவனத்தின் தலைவர் அஜித் டயஸ் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பணிப்பாளர் சபையின் ஏழு உறுப்பினர்களில் ஆறு உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கு அரச அதிகாரிகளை கொண்ட குழு ஒன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

பிரதமரின் கீழுள்ள பொருளாதார முகாமைத்துவ குழுவினால் இந்த குழு நியமிக்கப்பட்டது.அதன் முதல் அறிக்கை கடந்த இருபதாம் திகதி முன்வைக்கப்பட்டது.

ஶ்ரீலங்கன் விமான சேவையின் முகாமைத்துவம் மாற்றமடைய வேண்டும் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி தற்போதைய முகாமைத்துவம் பதவி விலக வேண்டும் என அந்த குழு சிபாரிசு செய்துள்ளது.

Related posts: