அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் – விவசாயிகளின் நலன்களை உறுதி செய்வதற்கும் சட்டம் – நிதி அமைச்சர் பசில் பாதீட்டில் முன்மொழிவு!

Saturday, November 13th, 2021

அரச ஊழியர்களுக்கு மீண்டும் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்த அமைச்சர் பசில் ராஜபக்ச இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் – 2014 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 381 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

அந்தவகையில் மீண்டும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

முன்னர் மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொள்ளாத அரச ஊழியர்களுக்கு இதனை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை விவசாயிகளின் நலன்களை உறுதி செய்வதற்கும், விவசாயிகளை பாதுகாப்பதற்கும் சட்டம் தயாரிக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்..

மேலும், பயிர் செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்களை, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பால் உற்பத்தி தொடர்பான திட்டங்களை அதிகரிக்கும் நோக்கில் திரவ பால் பாவனையை அதிகரிப்பதற்காக ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக மேலும் 1000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்க எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதுஇவ்வாறிருக்க மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதுடன், சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கையில் உயர்தர மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுடன் கைகோர்த்து தனியார் துறையை ஊக்குவிக்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முன்மொழிந்துள்ளார்.

அத்துடன் மருந்துகளின் விலையை சீராக வைத்திருக்க பொருத்தமான விலை நிர்ணய பொறிமுறையை முன்வைக்க ஏற்கனவே முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ள அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய குழுவின் பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: