அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழவில்லை – எதிர்க் கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களால் அரசை ஒருபோதும் கவிழ்க்கவே முடியாது – ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!

Saturday, November 20th, 2021

எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களால் பலமிக்க தமது அரசை ஒருபோதும் வீழ்த்தவே முடியாது எனவும், தம்மை ஆட்சியில் அமர்த்திய மக்கள் இப்போதும் தம் பக்கமே நிற்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியிருந்தனர். இதன்போதே ஜனாதிபதி குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

அரசுக்கு எதிராக நாடெங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்துவிட்டார்கள் என்று சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால், உண்மையில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழவில்லை. எதிர்க்கட்சியினர் தான் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ளனர்; அவர்கள் தான் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.

அவர்களின் ஆதரவாளர்கள் தான் அரசுக்கு எதிராகக் கூச்சலிடுகின்றனர். இந்த எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமுள்ள எமது அரசை ஒருபோதும் வீழ்த்தவோ, கவிழ்க்கவோ முடியாது.

எம்மை ஆட்சியில் அமர்த்திய மக்கள் இப்போதும் எமது பக்கமே நிற்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றவில்லை என்பது உண்மைதான்.

அந்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம். கோவிட் பெருந்தொற்றே இதற்குக் காரணம்.

இந்தத் தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி எமது ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று எதிர்க்கட்சியினர் முட்டாள்தனமாகச் சிந்திக்கின்றனர். ஆட்சியைத் தீர்மானிப்பது எதிர்க்கட்சியினர் அல்லர்; மக்கள்தான் முடிவெடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: